என் மீதான பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகளால் நானும் எனது குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயுள்ளோம் – நடிகர் ஜெயசூர்யா. பாலியல் புகார்களை நடிகர் ஜெயசூர்யா மறுத்துள்ளார்: நானும் குடும்பத்தினரும் மனம் உடைந்துள்ளோம்
என் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான பாலியல் புகார்களால் நானும், எனது குடும்பத்தினரும் நிலைகுலைந்து போயுள்ளோம் என நடிகர் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பாலியல் சுரண்டல்களை அம்பலப்படுத்தியுள்ளது. மலையாள நடிகைகள் பட வாய்ப்புக்காக பலமுறை பாலியல் தொல்லைகளை சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த கட்டமாக பல நடிகைகள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
மலையாள நடிகர் சித்திக், எடவீல பாபு, கொல்லம் எம்எல்ஏ முகேஷ், ஜெயசூர்யா, மணியம் பிள்ளை ராஜு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ஜெயசூர்யா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை மீனு முனீர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயசூர்யா மீது 354, 354ஏ, 509 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு எர்ணாகுளம் மாவட்டம் தொடுபுலாவில் நடந்த படப்பிடிப்பின் போது நடிகர் ஜெயசூர்யா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் காவல் துறை டிஜிபிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த மின்னஞ்சலின் அடிப்படையில் திருவனந்தபுரம் கரமனா போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 354சி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தில் நடிகர் ஜெயசூர்யா முதல்முறையாக மவுனம் கலைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் ஜெயசூர்யா கூறுகையில், இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) “நான் எங்கும் ஓடவில்லை. மலையாள திரையுலகத்தை அழிக்காதீர்கள். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், நமது திரையுலகம் பாதுகாக்கப்பட வேண்டும். நடிகரும் ‘அம்மா’ அமைப்பின் முன்னாள் தலைவருமான மோகன்லால் கூறியது போல் ஜெயசூர்யாவின் விளக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜெயசூர்யா இன்று (செப்டம்பர் 1) தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறார்.
இந்நிலையில், ஜெயசூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மற்றும் இந்த காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. எனது தனிப்பட்ட வேலை காரணமாக கடந்த ஒரு மாதமாக குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறேன். தற்போது என் மீது இரண்டு பொய்யான பாலியல் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது என்னையும் என் குடும்பத்தையும் சீரழித்துவிட்டது.
அதை சட்டப்படி சந்திக்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக எனது சட்ட உதவி குழு நடவடிக்கை எடுக்கும், நேர்மையற்றவர்கள் மற்றவர்கள் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவார்கள். உண்மையில், பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது சித்திரவதையைப் போலவே வேதனையானது. பொய் உண்மையை விட வேகமாக பயணிக்கிறது. ஆனால் உண்மை வெல்லும் என்று நான் நம்புகிறேன்.
இங்கு வேலை முடிந்து கேரளா திரும்புவேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். எனது பிறந்தநாளை வருத்தப்படுத்தியவர்களுக்கும் நன்றி. இங்கே பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை பாவிகளின் மீது எறியட்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார்.