6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை: பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர் மோடி 6 வந்தே பாரத் சேவைகளை தொடங்கி வைக்கிறார்
புதுடெல்லி: டாடாநகர்-பாட்னா, கயா-ஹவுரா உள்ளிட்ட 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
டாடாநகர்-பாட்னா, பாகல்பூர்-தும்கா-ஹவுரா, பிரம்பூர்-டாடாநகர், கயா-ஹவுரா, தியோஹர்-வாரணாசி மற்றும் ரூர்கேலா-ஹவுரா ஆகிய 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் பேசினார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் 6 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 650 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மூலம் போக்குவரத்து உள்கட்டமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் சில பகுதிகளில் மட்டுமே வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜார்கண்ட் பின்தங்கியிருந்தது. ஆனால் எங்களின் பொன்மொழி, ஒன்றாக நாம் வளம் பெறுவோம், அதையெல்லாம் மாற்றியது. இப்போது ஏழைகள், பழங்குடியினர், தலித்துகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அதனால்தான் ஜார்கண்ட் பாரத் ரயில்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுள்ளது. இது கிழக்கு பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்தும். வந்தே பாரத் ரயில் வணிகர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் என பலருக்கும் பயனளிக்கும். தியோஹர் (வைத்யநாத் கோயில்), வாரணாசி (காசி விஸ்வநாதர் கோயில்) மற்றும் கொல்கத்தா (காளி மற்றும் பேலூர் மாதா கோயில்கள்) உள்ளிட்ட நகரங்களை இணைப்பதால் இது ஆன்மீக சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும். இந்த ரயில்கள் தன்பாத் (நிலக்கரி சுரங்கங்கள்), கொல்கத்தா (சணல் தொழிற்சாலைகள்), துர்காபூர் (இரும்பு ஆலைகள்) உள்ளிட்ட நகரங்களையும் இணைக்கும். இதனால் தொழில்துறையினர் பயன்பெறுவார்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.