வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 8 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 8 பேர் திரிபுராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்
அகர்தலா: வங்கதேசத்தில் இருந்து திரிபுராவிற்குள் ஊடுருவிய 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வழிகாட்டியாக பணியாற்றிய இந்தியரும் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவின் திரிபுரா, மேகாலயா, மிசோரம், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் வங்காளதேசத்தின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ளன. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் சம்பவங்கள் தொடர்கின்றன. இந்தியாவில் 2 கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் சட்டவிரோதமாக குடியேறியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், வங்கதேசத்தை சேர்ந்த கும்பல் ஒன்று இந்தியாவின் திரிபுரா மாநிலத்துக்குள் ஊடுருவியுள்ளதாக அந்த மாநில போலீசாருக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. இதன் காரணமாக திரிபுரா முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
திரிபுரா தலைநகர் அகர்தலா ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். வங்கதேச கும்பலுக்கு வழிகாட்டியாக பணியாற்றிய திரிபுராவைச் சேர்ந்த செந்து குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
அகர்தலா ரயில்வே போலீஸ் அதிகாரி தபஸ் தாஸ் கூறுகையில், “வங்கதேசத்தின் கொமிலா பகுதியை சேர்ந்த 8 பேர் திரிபுராவின் சோன்புரா பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகளை செந்து குமார் ஏற்பாடு செய்துள்ளார்.”
8 பேரும் சோன்புராவில் இருந்து வாகனம் மூலம் அகர்தலாவுக்கு வந்துள்ளனர். இங்கிருந்து மகாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கு ரயிலில் செல்ல திட்டமிட்டுள்ளனர். உளவுத் துறையினரின் தகவலின்படி 8 பேரை கைது செய்துள்ளோம்.
எல்லையில் எப்படி ஊடுருவினார்கள், எதற்காக இந்தியா வந்தார்கள், யாருடன் தொடர்புடையவர்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 8 பேர் கைது செய்யப்பட்டதாக பங்களாதேஷ் தூதரகத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.